அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு எடுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் 4 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் நேற்று 2 ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்குபதிவு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே ரதாபரி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரின் பின்பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லப்பட்டது. அப்போது இந்த தகவலை அறிந்த எதிர்க்கட்சியினர் காரை தடுத்து நிறுத்தி வாக்குப்பதிவு இயந்திரம் காரில் இருப்பதை வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலானது.
இதையடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வோரு முறை தேர்தல் நடக்கும்போதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இன்றி எடுத்து செல்லப்படுகின்றன. ஆனால், இந்த முறை பாஜக வேட்பாளரின் காரிலேயே எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது, இதற்கு அசாம் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்துச் சென்ற போது கார் பிரேக் டவுன் ஆனதால், வேறு வழியின்றி அப்பகுதியில் வந்த வாகனத்தை வழிமறித்து லிப்ட் கேட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும், அது பாஜக வேட்பாளருக்கு சொந்தமான கார் என்று அதற்கு பின்னர் தான் தெரியவந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதால் அந்த காரை தடுத்து நிறுத்திய சிலர் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வாக்கு இயந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







