டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைந்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், செக் குடியரசு, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 12 வீரர்கள் பங்குபெற்றனர். மொத்தம் 6 சுற்றுகளை கொண்ட இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.06 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பிடித்தார். பின்னர் இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை மீண்டும் உறுதி செய்தார். இதைத்தொடந்து நடந்த 4 சுற்றுகளிலும் முந்தைய தூரத்தை விட குறைவான தூரமே எறிந்தாலும் வேறு எந்த வீரர்களும் நீரஜ் சோப்ராவின் 87.58 மீட்டரை கடந்து ஈட்டி எறியாததால் இறுதியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வேட்லேஜெக் மற்றும் வெஸ்லி ஆகிய வீரர்கள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். வேட்லேஜெக் 86.67 மீட்டர் தூரமும், வெஸ்லி 85.44 மீட்டர் தூரமும் வீசினர். இதில் முதல் மூன்று சுற்றுகளில் 2வது இடத்தில் இருந்த ஜெர்மனி நாட்டு வீரரின் 85.30 மீட்டர் தூரத்தை நான்காவது மற்றும் 5வது சுற்றுகளில் கடந்து செக் குடியரசு வீரர்கள் முறியடித்தனர். இதனால் ஜெர்மனி வீரர் வெப்பர் நான்கவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தடகளப் பிரிவு போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா துப்பாகிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார். அதன் பிறகு 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றாலும், தங்க பதக்கம் யாரும் வெல்லவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய வீரர் தங்க ஒருவர் தங்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹரியானாவைச் சேர்ந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பது வரலாற்று சாதனையாகும்.
தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஹரியான முதலமைச்சர் மனோகர் லால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணி புரிந்துவருவதால், ராணுவ வீரர்கள் உடபட இந்தியா முழுவதும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை கொண்டாடி வருகின்றனர்.








