மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார்.
ஜெயங்கொண்டத்தில், பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயி, விவசாய தொழிலாளி ஆகிய இருவரையும் இரு கண்களை போன்று அதிமுக அரசு பாதுகாத்து வருவதாகக் கூறினார். அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி எனவும், திமுக தலைமையிலான கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் சாடினார்.
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர், அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து விமர்சித்தார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும் என்று விளக்கம் அளித்தார். மேலும், பண்ருட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக என விமர்சனம் செய்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இலவச வாஷிங் மெஷின் உள்பட அனைத்து அறிவிப்புக்களும் நிறைவேற்றப்படும் என்றார்.







