திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முதியவர்கள், முதல் முறை வாக்காளர்கள் என பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடைமையை ஆற்றிவருகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாக்கினை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி மற்றும் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தமது வாக்கினைச் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,“அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதனுடைய முடிவு மே 2-ம் தேதி சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுடைய மனநிலை ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளது. தேர்தல் நடவடிக்கையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி, அதிருப்தி என சொல்லமுடியாது அளவுக்கு உள்ளது. வாக்களிக்கப் பணம் கொடுப்பது குறித்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணபலத்தை முறியடித்து திமுக வெற்றிபெறும்” என்றார்.
வாக்கு செலுத்துவதற்கு முன்பு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக ஆதி. ராஜாராம், அமமுக ஜெ.ஆறுமுகம், மநீம ஜெகதீஷ்,. நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள்.