கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று தற்போது மேலும் அதிகரித்துவரும் நிலையில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா வைரசின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,342 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை மாவட்ட நிர்வாகங்கள் கண்டறிந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துக்கொள்ளலாம். மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்கள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடரும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தவேண்டும். கொரோனா பாதித்தவர்களைத் தனிமைப்படுத்த முகாம்கள் அமைத்துக் கண்காணிக்கவேண்டும்.கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். வாய்ப்பு இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு (work from home) நீட்டிக்கலாம். ஊழியர்களுடன் செயல்படும் நிறுவனங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







