ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 ) இவர் 2016 ஆம் ஆண்டு ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த அதே பள்ளியில் பயின்ற மாணவி ஒருவருக்கும் ஆசிரியர் ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜா குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று 2017 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்து நான்கு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மாணவிக்கும், முன்னால் ஆசிரியருக்கும் நான்கு வருடங்களாக பழக்கம் தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி ஆசிரியருக்கும், மாணவிக்கும் பழக்கம் உள்ளதை மாணவியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது.
அதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவியின் தாயார் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் ஆரணி டவுன் பகுதியில் உள்ள பள்ளியில் என் மகள் படித்து வந்தார். பள்ளியில் பணிபுரியும் ராஜா என்ற ஆசிரியர் என்னுடைய மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு காவல் ஆய்வாளர் ஷாகின் வழக்கை விசாரனை செய்து முன்னால் ஆசிரியர் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை அமைத்து ராஜாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.







