அமோனியா கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்…!

அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூரில் உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வாயுவினால் கழுத்து பகுதி மற்றும் உடம்பின் பின்புற பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது.

ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் தான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் . அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இன்னும் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செயற்கை சுவாசத்திலிருந்து சிலர் மீண்டு வந்துள்ளார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடாது.

தொழிலாளர்களை தொழிற்சாலைகளில் தங்க வைப்பது குற்றம். அது சட்டத்திற்கு எதிரானது. நிறுவனத்தை முறையாக நடத்தி இருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.