திருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு…

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்தவர்கள், தந்தை அல்லது தாயை இழந்த 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காப்பகத்தில் 15 மாணவர்கள் இருந்தனர். நேற்று அதிகாலை காப்பகத்தில் தங்கி இருந்த சிறுவர்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பகத்தில் இருந்தவர்கள், சிறுவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் துரிதிஷ்டவசமாக பாபு, ஆதீஷ் மற்றும் மாதேஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவல் வெளியில் தெரியவந்ததும், காவல்துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் காப்பக நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவர்கள் உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறி காப்பகத்தை மூட உத்தரவிட்டார். இதனிடையே, உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அறிவுறுத்தியுள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.