ரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோடை…

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோடை கால விடுறையை முன்னிட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் காவடி பிறை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அதில் கோயில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 4 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரத்து 815 ரூபாயும், கோசாலை பராமரிப்பு மற்றும் யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 18 ரூபாயும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. மேலும் உபகோயில்கள் உண்டியல் மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 672 ரூபாயும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் 2 கிலோ 910 கிராம் தங்கமும், 42 கிலோ 750 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் 977 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் முதல்முறையாக ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.