இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, அரசியல் தலைவருக்கோ அல்ல.. ஒரு நல்ல மனிதருக்காக…” – நடிகை குஷ்பு கண்ணீர் அஞ்சலி!

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை…

சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவும், அவரது கணவரும் இயக்குநர் மற்றும் நடிகருமான சுந்தர் சி-யும் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

”விஜயகாந்த்தின் இழப்பு, எங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. நாங்கள் எப்போதும் படப்பிடிப்பு தளத்திலும், சாலிகிராமம் வீட்டிலும் ஏதேனும் பிரச்னை என்றால் கேட்பதற்கும், தைரியம் கூறுவதற்கும் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை எப்போதும் கொடுப்பவர். அவர் நம் மத்தியில் இல்லை என்று எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் அவர் நம் அனைவர் மனதிலும் இருக்கிறார். ஒருவர் இருக்கும் போது அவரது அருமை தெரியாது. அவர் சென்ற பின் தான் தெரியும். இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, அரசியல் தலைவருக்கோ அல்ல.. ஒரு நல்ல மனிதருக்காக…” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.