உத்தரபிரதேசம் வாரணாசியில் எம்வி கங்கா சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம் என பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27 நதிகள் வழியாக 3,200 கிலோமீட்டர் தொலைவுக்கு எம்வி கங்கா விலாஸ் சொகுசு நதி கப்பல் பயணிக்க இருக்கிறது. இந்த சொகுசு கப்பல் முதலில் வாராணசியில் இருந்து புறப்பட்டு பாட்னா நகருக்கு செல்லும். பின்பு அங்கிருந்து கொல்கத்தாவுக்கு சென்று அங்கிருந்து வங்கதேசத்துக்கு செல்லும். பின்பு வங்கதேசத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு திரும்பும். இந்த பயணம் அசாம் மாநிலத்தில் திப்ரூகார் நகரில் முடிவடையும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்தம் 51 நாட்கள் அடங்கிய இந்த பயணத்தில் 50 சுற்றுலா தளங்களுக்கு சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தொலைவை உள்ளடக்கிய பயணமாக இந்த பயணம் அமையவுள்ளது.
இந்த சொகுசு கப்பல் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த பயணத்தில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா மற்றும் திறந்தவெளி கண்காணிப்பு தளம் போன்ற பல வசதிகள் இருக்கும். கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சுந்தரவன டெல்டா, காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் வழியாக இந்த பயணம் செல்லும்” என தெரிவித்தனர்.
கங்கா விலாஸ் கப்பல் 62 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலில் மூன்று தளங்கள் உள்ளன. 18 அறைகளுடன் 36 பயணிகள் தங்கும் அளவில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக நீண்ட நதி பயண அனுபவத்தை கொடுக்கும் இந்த எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கங்கை நதியில் உலகின் மிக நீளமான நதி கப்பல் சேவையின் ஆரம்பம் ஒரு முக்கிய தருணம். இது இந்தியாவில் சுற்றுலாவின் புதிய யுகத்திற்கான ஆரம்பம்.இன்று, 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது கிழக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
ரிவர் க்ரூஸ் லைனர் எம்வி கங்கா விலாஸில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவில் உள்ள இயற்கை அழகை ரசிக்க உள்ளனர். இந்த பயணத்தில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளது. இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது. இந்தியாவை இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.