திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு தனிப்படை போலீசார் ஹரியானாவில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியாஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன..
கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றதை அறிந்து ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பூட்டி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலூர் வழியாக ஆந்திரா செல்லும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதே போல ஆந்திரா , கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் நேற்று நள்ளிரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஹரியானாவைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதை விசாரணையில் கண்டறிந்த தமிழ்நாடு காவல்துறை, குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஹரியானா விரைந்துள்ளது. ஹரியானா மாநிலம் நூக், மேவட், பால்வால் உள்ளிட்ட மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
– யாழன்







