பெற்றோருடன் செல்ல தென்காசி இளம்பெண்ணுக்கு அனுமதி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த…

தென்காசி இளம்பெண் கடத்தல் விவகார வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளனர். 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வீடு புகுந்து கடத்திச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் கிருத்திகா மற்றும் வினித் ஆகியோரது வீடியோ மற்றும் ஆடியோ உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். வினித்தும் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர்  நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். அப்போது கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்கவும் விரிவான விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி தென்காசியை அடுத்த மேலகரம் இந்திரா நகரில் உள்ள மகளிர் காப்பகத்தில் கிருத்திகா தங்க வைக்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் கவுன்சலிங் கொடுக்கப்பட்ட நிலையில், செங்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் சுமார் 1 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தென்காசி நீதிமன்றத்தில் கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதனையடுத்து நீதிபதிகள், கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணையில் பெற்றோர் உடன் செல்வதாக தெரிவித்துள்ளனர். மனுதாரர் தரப்பில், கிருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை பொருத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ அவருடன் தான் அனுப்பப்படுவார் என்றனர். அரசு தரப்பில், கிருத்திகா பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உறவினர்களிடம் கிருத்திகாவை ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், உறவினர்கள் தரப்பில் கிருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனு செய்யவும், அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும், கிருத்திகா பாதுகாப்பு மிக முக்கியம் எனக் கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், கிருத்திகா பெற்றோர் தரப்பில், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் மீது புகார் தெரிவித்தனர் அதற்கு நீதிபதிகள் நீங்களாக விருப்பப்பட்டு செய்தது. இதில் ஊடகங்களை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. என தெரிவித்தனர்.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.