சைவ சமயத்தினர் தேவாரம், திருவாசகம், பெரியபுராணத்தைப் போற்றிப் புகழ்வதைப் பார்த்திருப்போம். அவர்களே திருமூலர் அருளிய திருமந்திரத்தை , அதற்கு இணை செய்யும் வகையில் போற்றிப் புகழ்வதை அதிகம் கண்டிருக்க மாட்டோம். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”, “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் “, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன” போன்ற சொந்த மதத்தினர் மட்டுமின்றி, எந்த மதத்தினரும் ஏற்கக் கூடிய அமுதமொழிகளை அருளியவர்.
“நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ் திருமந்திரத்தின் சிறப்புகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று செல்வம் நிலையாமை குறித்த தலைப்பின் கீழ் திருமூலர் அருளிய ஒரு பாடலைப் பார்ப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. (216, திருமூலர்)
இந்த பாடலின் பொருளாவது, திருவடியுணர்வு கைவந்த நல்லோர் செல்வத்தின் உண்மையினைத் தெளிவிக்கத் தெளிந்து கொள்ளுங்கள். தெளிந்தபின் ஐயுற்றுக் கலங்காதீர்கள். ‘செல்வமானது ஆற்றுப் பெருக்கைப் போன்றது. மேட்டிற்கும் செல்லும், பள்ளத்திற்கும் செல்லும். அதனால் அச்செல்வத்தின் மீது பற்று கொண்டு கலங்கி மலங்க வேண்டாம். அதன் மீது வைத்திடும் பற்றியும் மாற்றிக்க்ள்ள வேண்டும். அவ்வாறு பற்றை ஒழித்தால் மட்டுமே, கூற்றுவன், அதாவது எமன் வரும் போது, செல்வத்தின் மீதான பற்றை நீக்கி மேன்மை நிலையை அடைய முடியும் என்கிறார் தெய்வத் திருமூலர்.
– வெற்றிநிலா