திருமூலர் அருளிய திருமந்திரத்தையும், அதன் சிறப்புகளையும் நாள்தோறும் பார்த்து, படித்து வருகிறோம். இன்று, அனைவரையும் ,உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அதிசய மந்திரமான திருமந்திரத்தின் ஒரு பாடல் பற்றி படிப்போம்…
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716)
சிவநாமத்தை உச்சரித்தால்…
சிவ நாமத்தை உச்சரிக்க தீவினைகள் அண்டாது. சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள். “சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்”– என்று திருமூலர் உரைக்கிறார்.
முன்பும் திருவருளால் ஒருவாது ‘சிவசிவ’ என்றோதும் பெருஞ்சூழ்வால் தாமும் ஓதும் வாய்ப்புப் பெறாதார் பலருளராவர். அவர்போல் தீவினையாளர் எவருமிலர். அத் தீவினையாளர் அப் பிழையினை எண்ணி, இப் பிறப்பிலேனும் ‘சிவசிவ’ என்று செம்மனத்தால் ஓதுதல்வேண்டும். அத் தீவினையாளர், அங்ஙனம் முன்வந்து ஓதுதல்அருமை. அதனால் தீவினையாளர் ‘சிவசிவ’ என்று ஓதுகின்றிலர். அத் தீவினை வேறொன்றானும் மாளாது. ‘சிவசிவ’ என்று இடையறாது ஓதுவதனால் மட்டுமே அத் தீவினை மாளும். ‘சிவசிவ’ என்று அம்மெய்யன்பர் இடையறாது ஓதிவரச் சிவவுலகச் செல்வராந் தேவராவர்.
சிவ சிவ என்றிட
‘சிவசிவ’ என்று மேலும் ஓதச் சிவநிலை எய்தித் திருவடியின்பந் துய்ப்பர். சிவ சிவ என்று கூறாவதவர் திவினையாளர். மெய்யன்பர்கள் நோன்பு நிலையினராவர். அவர் சிவவுருவினை வழிபடும் தேவராவர். பின்னும் ஓதுவோர் (2460) செறிவு நிலையினராவர். அவர்கள் சிவகதியாகிய திருவுரு எய்துவர். மேலும், ‘இத்திருப்பாட்டை ஈராறுமுறை தினமும் ஓதி வரின் , ஒத்தவுரு நூற்றெட்டாம் ஓர்.’ என்பதனால் திருமுறை பன்னிரண்டின் நினைவாய் இதனைப் பன்னிரண்டுமுறை நாளும் அனைவரும் ஓதுக. ஓதவே நூற்றெட்டுச் சிவம் செய்ததாகும்.
-தங்கம்







