திண்டிவனம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில்
மரக்காணம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி
மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து கிராம மக்களின் குடிநீர் பிரச்னைக்கு
நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 1,509 கோடி
மதிப்பீட்டில் மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
கொண்டுவரப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்
நாட்டினார்.
கடல் நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்தினை ஆளும் திமுக அரசு கைவிட்டுள்ளதால் அதனை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் இன்று திண்டிவனம் காந்தி சிலை முன்பு
உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அர்ஜுனன், சக்கரபாணி மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சி.வி சன்முகம் கூறியதாவது:-
முதல் கட்டமாக திண்டிவனம் நகராட்சி, விழுப்புரம் நகராட்சி மற்றும் விழுப்புரம்
மாவட்டத்தில் உள்ள 669 பேரூராட்சிகளில், மருத்துவமனைகளுக்கும் தங்கு தடை இன்றி
குடிநீர் வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்
என்ன குறை கண்டீர்கள். இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு சேலம் வேப்பூரில்
இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். சொல்வதற்கு நன்றாக இருக்கும்.
சட்ட சிக்கல்கள் இருக்கக்கூடிய காவேரி நதியின் மேட்டூரில் இருந்து தண்ணீர்
கொண்டு வர போவதாக காதில் பூசுற்ற பார்க்கிறார். அவர்களுடைய நோக்கம் திட்டத்தை
ரத்து செய்ய வேண்டும் என்பதே.
1500 கோடி செலவில் உருவாக்கப்பட்ட திட்டத்தை கைவிட்டு பத்தாயிரம் கோடி
ரூபாயில் நவீன திட்டம் ஒன்றை அறிவித்து அதில் 20%, 25% சதவீதம் என
கொள்ளையடிப்பது தான் திமுகவின் நோக்கம்.
அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு விட்டு
புதிதாக திட்டங்களை உருவாக்கி அதில் கமிஷன் பார்ப்பது திமுக அரசின் வேலையாக
உள்ளது.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விழுப்புரம் மாவட்ட மக்களின் நலனுக்காக
உருவாக்கப்பட்டது. இது வியாபாரம் இல்லை. உணவு, குடிநீர் இவை எல்லாம் வியாபாரம்
இல்லை. அரசு மக்களுக்காக வழங்க வேண்டிய அடிப்படை கடமை, இதில் கணக்கு பார்க்கக் கூடாது என்றார் சி.வி.சண்முகம்.








