அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார். இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,
“இன்னும் பாரதிய ஜனதா கட்சியுடன் நாங்கள் மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார்கள். ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். முன்னணி தலைவர்களும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்கள். 25.9.2023 அன்று மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கூட்டணி இல்லை என நாங்கள் அறிவித்தோம். பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணியில் இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை.
25.9.2023 அன்றே தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்ட செய்தி இது. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இறுதியாக சொல்கிறோம், உறுதியாக சொல்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கூட்டணியில் இல்லை. இனி ஊடக நண்பர்கள் இது தொடர்பான கேள்வியை எந்த இடத்திலும் எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.







