தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருகிறதாகவும், தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி கோவையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
“கோவை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நான் அடிக்கடி வருகின்ற ஊர் கோவை தான். எனது வீட்டிலும், நமது முதலமைச்சர் வீட்டிலும் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சீரான குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இன்று தமிழ்நாடு வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
நமது கட்சியிலும் சரி, களத்திலும் சரி மக்கள் பணியை சிறப்பாக செய்பவர் அமைச்சர் கே.என்.நேரு. தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைத்து நகரங்களும் சீராக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட சிறப்பான வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இந்த திமுக அரசு விளங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 6 லட்சம் கோடி வரியாக கொடுத்துள்ளோம். ஆனால் நமக்கு திருப்பி தந்தது ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே.
அடுத்த இரண்டு மாதம் மிக முக்கியமான மாதம். கடந்த காலங்களில் இங்கு சிறு, சிறு தவறுகள் இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு, அனைத்து நிர்வாகிகளும் நமது திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.







