“தவெக அரசின் பாசிசப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது!” – நயினார் நாகேந்திரன்

மதுரையில் முத்துராமலிங்கனார் சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்ற பாஜகவினர் மீது பொய் வழக்கும் பதிவு செய்திருப்பது அராஜகம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “நேற்று முன்தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்ற பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் பாஜக தொண்டர்களை தடுத்து நிறுத்திய தவெக அரசின் ஏவல்துறை, அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்திருப்பது அராஜகம்.

தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு அனைத்து இடங்களிலும் முழு சுதந்திரம் கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்கள் மீது இப்படி அநியாயமாக அடக்குமுறையை ஏவுவது தான் தவெகவின் மாற்று அரசியலா?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையை, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தீர்க்கும் ‘கைக்கூலிகள்’ போல பயன்படுத்திக் கொள்ளும் சர்வாதிகார மனப்போக்கில் இருந்து முதல்வர் விஜய்
முதலில் வெளியில் வர வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் பொது இடங்களில் மரியாதையுடன் நடத்த வேண்டும்! பாஜகவின் மாவட்டத் தலைவர் உட்பட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.