தமிழ்நாடு நாள் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்
பள்ளிகல்வித்துறை முன்னெடுத்து தமிழறிஞர்களுக்கு பரிசு வழங்கி இருப்பது பாராட்டுக்குரியதாகும் என்று தெரிவித்த சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு நாளை அர்சு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் உருவானது. தமிழர் வரலாற்று நிரபரப்பு தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது (பின்னர் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயர் ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது). பழைய மெட்ராஸ் மாகாணமாக இருந்த பகுதியிலிருந்து பிரித்து கேரளம், கர்நாடகம், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தனித்தனியே உருவானது.
கடந்த 2006ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு 50வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்ட சூழலில், அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சந்தித்த எமது தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள், நவம்பர் 1ஆம் தேதியை அண்டை மாநிலங்கள் போல் நாமும் மாநில நாளாக கொண்டாடலாம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்தார். மாநிலங்கள் மறுசீரமைப்பில் தமிழர் நிலங்களை நாம் இழந்துள்ளோம். அதனால் ஈகியர் நாளாகவே கடைப்பிடிக்கலாம் என்று கலைஞர் அவர்கள் விளக்கமளித்தார்.
எனினும் இழந்த நிலங்களை இனி மீட்பதற்கு வாய்பில்லை எனும்போது, இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு இழந்துள்ள உரிமைகளை மீட்கும் தமிழர்களின் தொடர் போராட்டத்தின் அடையாளமாக நவம்பர் 1-ஐ ‘தமிழர் இறையாண்மை நாள்’ என்று அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடைப்பிடித்து வருகிறோம்.
இதன் தொடர்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் முன்னிலையில் 26.10.2010 அன்று மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘தமிழர் இறையாண்மை மாநாடு’ நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம், மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மாநிலங்களின் அரசு கொடி, கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை, வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன், தாய்மொழி வழிக் கல்வி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தமிழக எல்லைகள் மீட்பு, தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பு, நதிநீர் உரிமை போன்ற 30 தலைப்புகள் கொண்ட தீர்மானங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களால் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் எனும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நெடுநாள் கோரிக்கையை, நடைமுறைப்படுத்தி அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ்நாடு நாள்’ சிறப்பாக கொண்டாடப்படுவதை உறுதிசெய்திடும் வகையில் அத்தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதே சிறுத்தைகளின நிலைப்பாடு. தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழ் – தமிழ்நாடு பின்னுள்ள போராட்டம் தியாகம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் போட்டிகளும், சிறப்பு முன்னெடுப்புகளும் மாநிலம் தழுவிய அளவில் பள்ளிகல்வித்துறை சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் முன்னெடுப்பது பாராட்டுக்குரியது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




