சிங்காரம்:
நரிகுறவ மக்களின் வாழ்வியல், அவர்களின் கஷ்ட,நஷ்டங்கள் அந்த இனத்தை சேர்ந்த யோகிபாபு எப்படி எம்எல்ஏ ஆகிறார் என்பதை அழுத்தமாக சொல்லும் கதை. கே.வி. கதிர்வேலு இயக்கியிருக்கிறார். 1990களில் இந்த கதை நடக்கிறது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏரியாவுக்கு தங்கள் குழுவுடன் பிழைக்க வருகிறார் யோகிபாபு. ஊரில் இருக்கும் எம்எல்ஏ மாரிமுத்து, அவர் தம்பி சென்ட்ராயன், இன்னும் சிலர் அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். ஊர் பெரியவரான வேல.ராமமூர்த்தி மட்டும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இதற்கிடையே, காலில் ஏற்பட்ட புண் காரணமாக, யோகிபாபு அப்பா எம்.எஸ்.பாஸ்கர் காலில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. பணம் இல்லாமல் அவர்கள் தவிக்க, எம்.எஸ்.பாஸ்கர் தற்கொலை செய்கிறார். அவர் வாங்கி வைத்திருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழ, அந்த ஊரில் வசதியாக வாழ ஆரம்பிக்கிறார் யோகிபாபு. ஊரில் முக்கியமான மனிதர் ஆகி, மக்களுக்கு நல்லது செய்கிறார். சூழ்நிலை காரணமாக அவர் எம்எல்ஏ தேர்தலில் களம் இறங்க, அவரை எதிர்த்து மாரிமுத்து, படவா கோபி நிற்கிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்பது சிங்காரம் படக்கதை. சிங்காரம் என்பது யோகிபாபுவின் கேரக்டர் பெயர்.
நரிகுறவ மக்களின் வாழ்க்கையை வெகு இயல்பாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கர், அவர் மனைவி தீபா, சாம்ஸ், கணேஷ், சபிதாராய் உள்ளிட்டோர் அந்த கேரக்டராகவே மாறி, நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள். அவர்களின் நடை, உடை, பாடிலாங்குவேஜ், சின்ன, சின்ன கிண்டல் கேலி, கண்ணீர் ஆகியவை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து இருக்கிறது. அந்த இனத்தை சேர்ந்த பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், மழையால் கஷ்டப்படுவது, ரேஷன் அரிசி கூட வாங்க முடியாமல் தவிக்கும் கொடுமை, அவர்களிடம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றும் நபர்கள், கடை போடக்கூடாது என தடுக்கும் ஊர்மக்கள், அந்த இன குழந்தைகள் ஊர் திருவிழாவில் சாப்பிடக்கூடாது என விரட்டுவது ஆகியவை நம் மனசை பிசைகிறது.
சமீபத்தில் எந்த படத்திலும் இவ்வளவு விரிவாக, அவர்கள் வாழ்க்கையை யாரும் சொல்லவில்லை. இந்த மாற்றங்கள் இப்போது நடந்துள்ளது என இயக்குனர் படத்தின் முடிவில் திரையில் விவரிக்கும்போது ஒரு வித நிம்மதி ஏற்படுகிறது. யோகிபாபு நடிப்பு ஓகே. அந்த கேரக்டருக்கு அவர் பெரிதாக செட்டாகவில்லை. அவருக்கு அந்த பாடிலாங்குவேஜ், ஸ்லாங் வரவில்லை. அவருக்கான காதல், ஜோடி விஷயத்திலும் புதுமை இல்லை. மறைந்த மனோபாலா, மாரிமுத்து ஆகியோர் முக்கியமான கேரக்டரில் வருகிறார். காமெடியன் சென்ட்ராயனை வில்லன் ஆக்கி இருப்பது கதையுடன் ஒட்டவில்லை. முதற்பாதி முழுக்க கதையில் அழுத்தம், திருப்பங்கள் இருக்கிறது. அடுத்த பாதி அரசியல், தேர்தல், பிரச்சாரம் என செல்வதில்லை விறுவிறுப்பு இல்லை. கிளைமாக்ஸ் கூட இன்னும் நச்சென இருந்து இருக்கலாம். நரிகுறவ மக்களின் அரசியல் பயணம் என்ற நல்ல கதைதான். ஆனால் பிற்பாதி கதை அதற்கு வலு சேர்க்கவில்லை.

பனிவிழும் இரவு:
விரைவில் திருமண ஆக உள்ள ஒரு இளம் ஜோடி போட்டோசெஷன் எடுக்க கொடைக்கானல் வருகிறது. ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகிறது. ஏற்கனவே அங்கே ஒரு பெண் தற்கொலை செய்து இருக்கிறார். அப்போது என் காதலியை காணவில்லை என்று ஹீரோ அருண்கார்த்தி போலீசில் புகார் கொடுக்கிறார். எனாக்ஷி கங்குலிக்கு என்ன ஆனது? அந்த இடத்தில் என்ன நடந்தது? இதுதான் எஸ்.ஆர். ராஜேஷ் இயக்கிய ‘பனிவிழும்இரவு’ படக்கதை. கிரைம் திரில்லர் கலந்த உளவியில் கதை.
கொடைக்கானலில் போட்டோசெஷன், அந்த கெஸ்ட் ஹவுசில் நடக்கும் மர்மங்கள், வாட்ச்மேன் காமெடி என ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, அந்த பெண் காணாமல் போனபின் சூடு பிடிக்கிறது. வாட்ச்மேன், திருட வந்தவர்கள், பால்காரன் என பலரையும் விசாரிக்கிறார் போலீஸ் ஏட்டு கருப்பு நம்பியார். அவரின் கேரக்டர், அவரின் விசாரணை காட்சிகள், நடிப்பு, அதில் வரும் திருப்பங்கள் படத்துக்கு பிளஸ். காதலி காணாமல்போனபின் கலங்குவது, கிளைமாக்சில் இன்னொரு முகம் என ஹீரோ அருண்கார்த்தியும் ஓரளவு நடித்திருக்கிறார், ஹீரோயின் எனாக்ஷிக்கு பெரிய பங்கு இல்லை. வாட்ச்மேன் ஆக வரும் சரவணசக்தி ஒன்றிரண்டு சீன்களில் கவர்கிறார். கவுரவ வேடத்தில் கஜராஜ் வருகிறார்.
ஆரம்பத்தில் பேய்கதை மாதிரி தெரிகிறது. பின்னர், விசாரணை, திரில்லர் என மாறி, கடைசியில் உளவியில் ரீதியாக ஒரு பிரச்னையுடன் படம் முடிகிறது. இந்தவகை திரைக்கதை, திருப்பங்கள், கிளைமாக்ஸ் ஓகே. ஆனால், புதுமுகங்கள் நடித்து இருப்பதும், சீன்களில் ஒருவித விறுவிறுப்பு இல்லாதததும் படத்தின் மைனஸ்.முதலில் வழக்கமான கதையாக நகர்ந்தாலும், அடுத்தடுத்து மாற்றங்கள், விசாரணை, சந்தேகம் என மாறி, கடைசியில் ஒரு புது விஷயத்தை கிளைமாக்சில் சொல்லி முடித்து இருக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தின் பலம். என்ன, அதை இன்னும் கமர்ஷியலாக சொல்லியிருக்கலாம்.

எனிமி ஆப் த ஸ்மக்ளர்:
வெளிநாட்டில் இருக்கும் போதை மருந்து கடத்தல் மன்னன் லால், இந்தியாவிற்கு அனுப்பும் 25 ஆயிரம்கோடி மதிப்புள்ள போதை பொருளை, துறைமுகத்தில் இருந்து எடுத்து வர வேண்டியது சின்ன டான் ஜே.டி.சக்ரவர்த்தியின் வேலை. அவரிடம் வேலை செய்யும் சரணும், பாலசரவணனும் குஜராத் துறைமுகத்தில் இருந்து அதை கடத்துகிறார்கள். சும்மா இருப்பார்களா வில்லன்கள்? அந்த கன்டய்னரை கைப் பற்றினார்களா? ஹீரோ புத்திசாலிதனமாக செயல்பட்டு ஜெயித்தாரா? எப்படியாவது அந்த கடத்தலை தடுக்கணும் என நினைக்கிற கஸ்டம்ஸ் அதிகாரி டி.சமயமுரளி என்ன செய்கிறார் என்பது எனிமி ஆப் த ஸ்மக்ளர் கதை.
போதை மருந்து டான்கள், கடத்தல், துறைமுகம், கன்டய்னர், கஸ்டம்ஸ் செயல்பாடுகள் என பல புது விஷயங்களை சொல்லி, தானே கஸ்டம்ஸ் அதிகாரியாக நடித்து இயக்கி இருக்கிறார் டி.சமயமுரளி. அவர் நிஜத்திலும் அந்ததுறை அதிகாரி என்பதால், சீனனுக்கு சீன் அவ்வளவு புது விஷயங்களை சொல்லியிருக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் முறைகேடுகள், கஸ்டம்ஸ் ஆபீசில் நடக்கும் விஷயங்கள், கடத்தல்காரர்களின் யுக்திகள் என திரைக்கதையில் பல விஷயங்களை சொல்வது படத்தை ரசிக்கவைக்கிறது. முதல்பாகத்தில் சரண் ஹீரோ. அவரின் காதல், பணத்தேவை, கடத்தல் ஆகியவை பரபரப்பான சீ்ன்கள், ஜே .டி.சக்ரவர்த்தி டீமில் சேருவது, பல சிக்கலான விஷயங்களை எளிதாக முடிப்பது, கடைசியில் அவரை ஏமாற்றி கன்டய்னர் கடத்துவது ஆகியவை ஓகே.
ஆனால், பிற்பாதியில் கஸ்டம்ஸ் ஆபீசராக வரும் சமயமுரளி ஹீரோவாகிறார். குஜராத் துறைமுகத்தில் அவர் காட்டும் கெடுபிடி, கடத்தல்காரர்களை துரத்துவது, புத்திசாலிதனமாக செயல்படுவது இன்ட்ரஸ்ட்டிங். வழக்கமான போதை மருந்து கடத்தல், டான், நெட்வொர்க் என கதை சென்றாலும், கஸ்டம்ஸ் விஷயத்தில் நடக்கும் தகவல்கள், அதன் பின்னணியை விரிவாக சொல்வது கதையை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. சரண், அவர் காதல் காட்சிகள் ஓகே. சரண் அம்மாவாக வரும் ராதிகாவை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அதிகம் பேசாமல் உடல்மொழியால் மிரட்டுகிறார் ஜே.டி.சக்ரவர்த்தி, டான் ஆக வரும் லால் நடிப்பும் பிரமாதம். பாலசரவணன் அதிகம் காமெடி பண்ணாமல் சீரியஸ் ரோல் செய்து இருக்கிறார்.
ஹீரோயின் அண்ணனாக வரும் காளிவெங்கட் சென்டிமென்ட்டில் கலக்கியிருக்கிறார். தவசிமாஸ்டர் சண்டை பயிற்சியும், ஒரு முக்கியமான கேரக்டரில் வந்து கிளைமாக்சில் ஒரு சண்டையில் முக்கிய பங்கு வகிக்கும் அவர் மகன் தர்ஷித்ராஜ் கேரக்டர் மனதில் நிற்கிறது. கஸ்டம்ஸ் ஆபீசராக வரும் வினோதினி, ஜே .டி.சக்ரவர்த்தி டீமில் உள்ள சிலரின் நடிப்பும் ஓகே. ஆடல், பாடல், காமெடி போன்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவு. ஒரு குத்து பாட்டு மட்டும் ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் இயக்குனர் தனக்கான சீன்களை அதிகப்படுத்தி, தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். அதை குறைத்து இருக்கலாம். ஆனாலும், கடத்தல், கஸ்டம்ஸ் பின்னணியில் இதுவரை சொல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறது கதை.

செய் செய்யாதே:
மதுரையை சேர்ந்த நல்ல டாக்டர் எஸ்.ராஜாவுக்கும், பணத்துக்காக நோயாளிகளை இம்சை படுத்தி, நோய்களை உருவாக்கும் கெட்ட டாக்டரான அவர் மகன் குருவிஜய்க்குமான மறைமுக மோதலே செய் செய்யாதே படத்தின் கதை. நிஜத்தில் பிரபல டாக்டரான மதுரை, அமெரிக்காவில் பணியாற்றிய டாக்டர் எஸ்.ராஜாவே இந்த படத்தை இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் டீன் ஆக இருக்கும் எஸ்.ராஜா, பணம் பறிக்கும் நோக்கம் இல்லாமல் நோயாளிகளுக்கு சேவை செய்கிறார். தனி மருத்துவமனை நிர்வாகியாக இருக்கும் அவர் மகன் குருவிஜய், சில தொழிலதிபர், அரசியல்வாதிகளுடன் கூட்டணி வைத்து நோயாளிகளின் பயம் காண்பித்து பணம் பறிக்கிறார். ஒரு வைரஸ் காய்ச்சல் பரவ, அதை பயன்படுத்தி பல கோடி பணம் சம்பாதிக்கிறார். ஒரு பொருள் மூலமாக நோயை உருவாக்குகிறார். இதை அப்பாவான டாக்டர் எப்படி கண்டுபிடிக்கிறார். அரசு அதிகாரிகள், முதல்வர் துணையுடன் எப்படி தடுக்கிறார் என்பது படத்தின் கதை
டாக்டராக நடித்த எஸ்.ராஜா கேரக்டர், பேச்சு, செயல்பாடுகளை பார்க்கும்போது நம் ஊரில் இருந்த, நாம் பார்க்கும் தன்னலமற்ற, சேவை மனப்பான்மை உள்ள பல டாக்டர்கள் நினைவுக்கு வருவார்கள். எதற்கெடுத்தாலும் டெஸ்ட் வேணாம், ஆபரேஷன் வேணாம். விலை குறைந்த மருந்து, மாத்திரைகளால் பல நோய்களை குணப்படுத்த முடியும் என சொல்வதும், அரசு மருத்துவமனை, அரசுடாக்டர்கள், ஊழியர்களை உயர்வாக காண்பித்து இருப்பதும் நல்ல பாசிட்டிவ் சிந்தனை. அவரின் செயல்பாடுகள், சில துப்பறியும் விஷயங்கள், கடைசியில் ஆபத்தை தடுப்பது நல்ல சீன்கள். அவரும் இயல்பாக நடித்து இருக்கிறார். அவர் மகனாக வரும் குருவிஜய் பல டாக்டர்களை நினைவுப்படுத்துகிறார். சாதாரண நெஞ்சுவலிக்கு ஆபரேஷன் செய்ய சொல்வது, சின்ன விஷயத்தை பெரிதாக்கி தனியார் மருத்துவமனையை லாபகரமாக்கும் அவரின் செயல்கள் அச்சமடைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் நோய்களை உருவாக்குவது, அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பதும் பதட்டத்தை உருவாக்கிறது. அவருக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எப்படி துணை போகிறார்கள் என்பதை காண்பித்து இருப்பது நச்.
டாக்டர் எஸ்.ராஜா மனைவியாக வரும் தர்ஷினி ரெட்டி, காதலி பபிதா நடிப்பு ஓகே. முழுக்க மருத்துவதுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு படமாக இருப்பதால் மற்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவு. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முதல்வராக நடித்து பல அதிரடிகளை செய்கிறார். அவர் பேசும் சமூகஅக்கறை உள்ள வசனங்கள் அருமை. சிலருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, அதற்கு பின்னணியில் உள்ள விஷயங்களை டாக்டர் எஸ்.ராஜா கண்டுபிடிக்கும் சீன்கள் ஸ்பீடு. கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டும் ரசிக்க வைக்கிறது. சில குறைகள் இருந்தாலும், கொஞ்சம் ஆவணப்படம் மாதிரி தெரிந்தாலும் இன்றைய மருத்துவ உலகம் , தனியார் மருத்துவமனைகளில் மறுபக்கம், தேவையற்ற டெஸ்ட், ஆபரேஷன், செலவு, நோயாளிகளின் பரிதப்பு என பல அக்கறையுள்ள விஷயங்களை சொல்கிறது செய் செய்யாதே. படம் பார்க்கும் பலருக்கு தங்களின் மெடிக்கல் சம்பந்தப்பட்ட பல நினைவுகள் வந்துபோவது நிச்சயம்.

– மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.




