சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 12-ஆம் தேதி பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு , “பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு தேசியவாதி. அவரை பற்றி யாருக்கும் முழுமையாக தெரியவில்லை என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர் என் ரவியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலி இன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்ததாக அண்ணல் அம்பேத்கர் குறித்து பாடம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. “அம்பேத்கர் பற்றி பலரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். அரசியலுக்காக மட்டும் பயன்படுத்துகின்றனர்” என்று வருத்தப்பட்டு இருக்கிறார் ஆளுநர்.
அம்பேத்கரை முழுமையாக அவர் அறிந்திருக்கிறாரா என்பதை அவர் உரை மூலமாக அறிய முடியவில்லை. அம்பேத்கரை அறிய வேண்டுமானால் அவரது புத்தகங்களை பரிந்துரை செய்கிறோம். இவருக்கு ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வேறொன்றுமில்லை, ‘சமூகநீதி’ என்ற சொல் அவருக்கு எரிச்சலைத் தருகிறது போலும். அதனால் தான் ‘சமூகநீதி’ யைக் குற்றம் சாட்ட, அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் ஆளுநர்.
தமிழ்நாட்டில் சாதித் தீண்டாமை தாண்டவம் ஆடுகிறதாம். ஆனாலும் நாம் சமூகநீதி பேசுகிறோமாம். ஆளுநர் நம்மை பார்த்து குற்றம் சாட்டுகிறார். ‘சனாதனம்’ பற்றியெல்லாம் ஆளுநர் பேசுகிறார். சனாதனம் என்பது தமிழ்நாட்டில்தான் தோன்றியது என்று சொன்னவர் ஆச்சே அவர்!
இதுதான் சமூகநீதியா, இதுதான் சமூகநீதியா என்று ஏதோ சமூகநீதிப் போராளியைப் போல ஆளுநர் கேட்கிறார். ஆளுநர் அவர்களே! நாங்கள் , திராவிடர்கள். ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் திராவிடர்கள் பரவி இருந்தார்கள்’ என்று சொன்னவரும் அண்ணல் அம்பேத்கர் என்பதை அறிவீர்களா? என கட்டமாக ஆளுநர் ஆர்.என் ரவியை நோக்கி முரசொலி தனது கேள்வியை முன்வைத்துள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா









