மாயமான சரக்கு ரயில் – ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி

நாக்பூர் – மும்பை இடையே அரிசி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனைய டெப்போவில்…

நாக்பூர் – மும்பை இடையே அரிசி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் உள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனைய டெப்போவில் இருந்து மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு 90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் கடந்த 1-ம் தேதி சென்றது. இந்த ரயிலில் அரிசி, காகிதம், பிளாஸ்டிக், ரசாயனப் பொருள்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த சரக்கு ரயில் 4 முதல் 5 நாட்களுக்குள் மும்பை சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு மேலாகியும் ரயில் அங்கு செல்லவில்லை.

ரயில் சரக்கு போக்குவரத்து தகவல் அமைப்பு மூலம் சரக்கு ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து கண்டறிய முடியும். ஆனால், இந்த சரக்கு ரயில் எங்குள்ளது என்பதைக் காண முடியவில்லை.

இந்நிலையில், கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், சரக்கு ரயில் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், காணாமல் போன சரக்கு ரயிலைத் தேடி வருகிறோம். ஆனால், அந்த ரயில் எங்குள்ளது என்பதை சரியாக கண்டறிய முடியவில்லை. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். ரயில்வே அதிகாரிகள்  ரயிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இந்த சரக்கு ரயில் கடைசியாக நாசிக் – கல்யாண் இடையே, ஓம்பர்மாலி ரயில் நிலையத்தை கடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான் ரயில் இருக்கும் இடம் தெரியவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையே ரயில் காணாமல் போனது குறித்து தகவலறிந்த ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், இச்சம்பவம் முழுக்க முழுக்க ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.