அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவதாகவும், இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்துவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் நேற்று தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று (மே 10) நடைபெற்ற விசாரணையில், ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
I welcome the Hon'ble #SupremeCourt's decision granting interim bail to Hon'ble Delhi Chief Minister and @AamAadmiParty National Convenor Thiru @ArvindKejriwal. This victory against injustice strengthens our democracy.
Thiru Arvind Kejriwal's release not only symbolises justice…
— M.K.Stalin (@mkstalin) May 10, 2024
இந்த தீர்ப்பினை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்-க்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, நமது இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்துகிறது. இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான நமது வேகத்தை அதிகரிக்கிறது” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.








