ரவுடியுடன் விவசாயிகளை ஒப்பிட்டு பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள வில்லுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பருத்தி விவசாயிகளிடையே உரையாற்றினார். இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத் தந்த மாநிலம் தமிழகம்தான் எனக் கூறினார்.
தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகளின் பாதுகாவலனாக இருந்து வரும் அதிமுக அரசு, குழந்தைகள் போல் அவர்களை பாதுகாத்து வருவதாகத் தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் மனம் புண்படும்படி பேசுவதாகவும், அவர்களை ரவுடிகளோடு ஒப்பிட்டு பேசுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி எனக் கூறினார். மக்களாட்சி நடைபெற்று வரும் தமிழகத்தில் மீண்டும் வாரிசு ஆட்சியாக மாற்ற மு.க.ஸ்டாலின் முயன்றுவருதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது எனக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி, மு.க.அழகிரி கட்சி ஆரம்பித்துவிட்டால் திமுக உடையும் எனக் கூறினார்.
தொடர்ந்து கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், சிறுகுறு தொழில்துறையை சேர்ந்தவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் புதிய புதிய தொழில்கள் துவங்கப்படுவதாகவும், இதன் மூலம் 10.50 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.







