“பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். “More Choices, More chances”

எனவே, ஒருவேளை முர்ககமைச்சர் விஜய்க்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.