இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் வகையில் ரயில்களில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கும்.
அந்த வகையில், நவம்பர் 5-ந்தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 6-ந்தேதி பயணம் செய்வதற்கு நாளையும், நவம்பர் 7-ந்தேதி பயணத்திற்கு நாளை மறுநாளும், 8-ந்தேதி பயணத்திற்கு அதற்கடுத்த நாளும் முன்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப செப்டம்பர் 10-ஆம் தேதி முன்பதிவு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




