விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலைகளை எளிதாக நிறுவ முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் அனுமதி பெற வேண்டும். அதுவும், வெண்கல சிலை தான் வைக்க முடியும். இதுவே அம்பேத்கரை அவமதிக்கு செயல் தான். சேலம் விவகாரத்தில் தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அம்பேத்கர் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும். மறியல் போராட்டம் நடத்திய தலித் அல்லாதவர் மீது வழக்கு இல்லை. ஆனால், தலித் மக்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். கைது செய்துள்ளார்கள். மாணவர்கள் கூட சிக்கியுள்ளனர். அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தவெக – பாமகவுடன் இணக்கமாக உள்ளதே என்ற கேள்விக்கு, “ தவெக யாரோடும் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கலாம்” என்றார்.
தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக பாமகவுடன் இணைந்து பயணிக்க முடியுமா என்ற கேள்விக்கு,
“சாதிய மதவாத அரசியலை கொண்டுள்ள கட்சிகளோடு தேர்தலுக்காக கூட கூட்டணி வைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தவெக – விசிக இடையே நல்ல இணக்கம் நிலவுகிறது” என்றார்.
பாஜகவிற்கு எதிராக விசிகவும் – பாமகவும் இணையுமா? எனும் கேள்விக்கு, பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் பாமகவை எதிர்த்தோம், யூகமான கேள்விக்கு யூகமான பதில் சொல்ல முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் சாதிய மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன் தேர்தலுக்காக கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் இன்றைக்கு உறுதியாக இருக்கிறோம். தவெகவுக்கும் , விசிகவுக்கும் நல்ல இணக்கம் நிலவுகிறது. எங்களுக்கு இடையில் எந்த இடைவெளியும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.




