“சனாதன தத்துவத்தின் உண்மையான வெளிப்பாடே தீபாவளி பண்டிகை” – ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளையொட்டி  தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ…

சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு தீபாவளி பண்டிகை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி திருநாளையொட்டி  தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவிகூறியிருப்பதாவது:

“ஒளியின் திருநாளான தீபாவளித் திருநாளில் எனது அன்புக்குரிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அல்லது ‘வசுதெய்வ குடும்பகம்’ என்ற நமது சனாதன தத்துவத்தின் லட்சியங்களின் உண்மையான வெளிப்பாடு இது. உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள், மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் “Vocal for Local” ஆக வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் பிறபரிசுகளை வாங்க உறுதிமொழி எடுப்போம்.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி வேலை செய்யும் தொழிற் சாலைகளுக்குச் சென்று, நம் தீபாவளியை ஒளிரச் செய்ய பெண் தொழிலாளர்களின் உழைப்பை நேரில் பார்த்தேன். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்”

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்து செய்தியை தமிழில் பேசி வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.