சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்…!
சுதந்திர இந்தியாவின் 1960களில் நடக்கும் கதை பராசக்தி. பல உண்மை சம்பவங்களை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டங்களில் நடந்த இந்தி திணிப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், மாணவர்களின் பங்களிப்பு, அதை அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அடக்கிய விதம், அரசியல் நிலைப்பாடுகள், துப்பாக்கி சூடு, தியாகம் என பல விஷயங்களை விரிவாக பேசுகிறது.
மதுரையை சேர்ந்த கல்லுாரி மாணவரான சிவகார்த்திகேயன் புறநானுாறு என்ற அமைப்பின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை தீவிரமாக நடத்துகிறார். ஒரு ரயில் எரிப்பு சம்வத்தில் தனது நண்பனை இழக்க, அதிலிருந்து விலகி அமைதி பாதைக்கு செல்கிறார். ஆனால், அவர் தம்பியான அதர்வா முரளி, சக மாணவர்களுடன் சேர்ந்து சிதம்பரத்தில் இந்தி எதிர்ப்பை முன்னெடுக்கிறார். அவருக்கு ஒரு விஷயம் நடக்க, அண்ணன் சிவகார்த்திகேயன் மீண்டும் களம் இறங்கி போராட்டங்களை இன்னும் தீவிரப்படுகிறார். பொள்ளாச்சியில் பல மாநில மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த, ஒரு விஷயத்தை டில்லி அரசியல் தலைமைக்கு உணர்த்த முயற்சிக்கிறார். அது சரியாக நடந்ததா? மாணவர்களின் கொள்கைக்கு எதிராக இருக்கும் போலீஸ் அதிகாரியான ரவிமோகன் பொள்ளாச்சியில் என்ன செய்கிறார். மாணவர்கள் போராட்டம் வென்று, இந்தி திணிப்பு கை விடப்பட்டதா? இதுதான் பராசக்தி கதை.
நாம் புத்தகங்களி்ல் படித்த, சில அரசியல் மேடைகளில் கேட்ட, தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு மாணவர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக, அழுத்தமான கதையாக பராசக்தியில் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. தமிகத்தின் சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் சினிமாவாகி இருக்கிறது. மொழிப்போர் எப்படி உருவானது. அதனால் என்னென்ன பாதிப்புகள் வந்தன. அதை எதிர்த்தவர்கள் எப்படி போராடினார்கள், என்னென்ன தியாகம் செய்தனர் என்பதை முக்கியமான பதிவாக பராசக்தியில் சொல்லியிருக்கிறார். பல உண்மை சம்பவங்களை குறிப்பாக, மதுரையில் அப்போதைய முதல்வருக்கு எதிர்ப்பு, சிதம்பரத்தில் மாணவர் போராட்டத்தில் கலவரம், பொள்ளாச்சியில் நடந்த கொடூரம் ஆகியவற்றை ஆவணப்படுத்தி, அதனுடன் காதல், நட்பு, பழிவாங்கல், டூயட், பைட், சென்டிமென்ட் கலந்து கமர்ஷியல் படமாகவும் மாற்றியிருப்பது சிறப்பு. இயக்குனரின் திரைக்கதை, வசனங்கள், சொல்ல விஷயத்தை பாராட்டலாம்.
கல்லுாரி மாணவராக, ரயில்வேயில் வேலை செய்பவராக, போராட்டக்குழு தலைவராக கிடைக்கிற இடங்களில் அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கும், தம்பி அதர்வாவுக்குமான பாசம் கண்கலங்க வைக்கிறது. ஸ்ரீலீலாவுடனான காதல் பீல் பண்ண வைக்கிறது. போராட்டங்களில் அவர் படுகிற அடி உருக வைக்கிறது. வசனம், நடிப்பு, சண்டை, எமோஷன் என அனைத்திலும் அவர் ஜொலிக்கிறார். அவரின் சினிமா வாழ்க்கையில் பராசக்தி முக்கியமான படம்.
வில்லனாக மாறியுள்ள ரவிமோகன் ஒருவித கொடூர மனநிலையில் சிறப்பான நடிப்பை தந்து இருக்கிறார். ஓவராக ஆடாமல், கத்தி, கதறாமல் ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கியிருக்கிறார். அவர் பழிவாங்கும் போக்கு, பேச்சு படம் பார்ப்பவர்களை ஆத்திரப்பட வைக்கிறது.
சிவகார்த்திகேயனின் தம்பியாக வரும் அதர்வா முரளி நடிப்பில் அப்படியொரு சுறுசுறுப்பு. அவரின் போராட்ட குணம், கோபம் அந்த கால மொழி போராளிகளை நினைப்படுத்துகிறது.
வழக்கமான ஹீரோயினாக காதல் செய்வது, டூயட் பாடுவது மட்டுமி்ல்லாமல், ஒரு இந்தி எதிர்ப்பு மாணவியாக, போராட்ட குழுவுக்கு உதவுபவராக ஸ்கோர் செய்து இருக்கிறார் ஹீரோயின் ஸ்ரீலீலா. அவரின் பாடல் காட்சி கலர்புல். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு. இவர்களை தவிர, இந்திராகாந்தி, அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் வேடத்தில் நடித்தவர்களும் சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
போராடும் மாணவர்கள், இந்தியால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரை இழந்தவர்கள், மாணவர் போராட்டத்துக்கு உதவும் காளிவெங்கட் போன்றவர்களும் மனதில் நிற்கிறார்கள். சின்ன, சின்ன கேரக்டர் தேர்வு கூட சிறப்பாக இருக்கிறது. தெலுங்கு நடிகர் ராணாவும், மலையாள நடிகர் பசில்ஜோசப்பும் கெளவுரவ வேடத்தில் வந்து, முக்கியமான சீனில் கை தட்டல் வாங்குகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் அடிஅலையே, ரத்னமாலா பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு, கோணங்கள் நம்மை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கிறது. அன்றைய சென்னை, மதுரை, சிதம்பரம், பொள்ளாச்சி, டில்லியை மனக்கண்ணில் நிறுத்தி இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் அண்ணாதுரை. படத்தின் வசனங்களும், திரைக்கதையும், கிளைமாக்சும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.
அரசியல் படமாக இருந்தாலும் பெரிய அரசியல் எதிர்ப்பு, அரசியல் சாடல் இல்லாமல் மாணவர்களின் போராட்டத்தை முன்னிறுத்துவது பிளஸ். பொள்ளாச்சியில்என்ன நடந்தது. சிதம்பரத்தில் எதை செய்தார்கள், மதுரையில் எதை எரித்தார்கள். அங்கே என்ன சாதிக்க நினைத்தார்கள் மாணவர்கள் என்ற உண்மை பதிவு பலருக்கு தெரியாத விஷயம். அதை பராசக்தி மூலம் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, மொழி போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறையை அழுத்தமாக , உண்மை சம்பவங்கள் பின்னணியில் சொல்லியிருப்பது படத்தின் பிளஸ். தமிழ்நாடு மட்டுமல்ல,மற்ற பல மாநிலங்களும் இந்திதிணிப்பால் பாதிக்கப்பட்டன.அவர்களும் போராடினார்கள், தமிழக மாணவர்களுக்கு கை கொடுத்தார்கள் என்பதெல்லாம் புதுசு. பொள்ளாச்சி சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ், அதில் நடக்கும் விஷயங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதில் சிவகார்த்திகேயன், காளி வெங்கட், ஸ்ரீலீலா, ரவிமோகன் ஆகியோரின் நடிப்பு அருமை.
இந்தி எதிர்ப்பு படமாக இருந்தாலும், கதையும், திரைக்கதையும், வசனங்களும் கவனமாக, மற்றவர்கள் மனதை புண்படுத்ததாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தவகை கதை, காட்சிகள், சம்பவங்கள், சொல்லப்படுகிற விஷயங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, குழந்தைகளுக்கு புரியாமல் இருக்கலாம். காமெடி, பொழுது போக்கு, ஆட்டம், பாட்டம் என கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் இருக்கலாம். இப்போதுள்ள யூத்
இந்தியால் என்ன பாதிப்பு என கேட்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு இப்படி பாதிக்கப்பட்டது. இப்படி போராடி, இரு மொழி கொள்கைக்கு மாறியது. தமிழர்கள், மாணவர்களின் போராட்ட குணம், ஒருங்கிணைப்பு, தியாகம் இப்படிப்பட்டது. அதை மறக்க கூடாது என இளம் தலைமுறையினர் அறியவும் பராசக்தி ஒரு பதிவாக இருக்கிறது. இந்தி எதிர்ப்பால் ஆட்சியை இழந்தவர்கள், ஆட்சிக்கு வந்தவர்களுக்கு கூட இந்த படத்தில் சொல்லப்பட்ட பல விஷயங்கள், பல வரலாற்று உண்மைகள் வியப்பாக இருக்கும். அப்படிப்பட்ட நல்ல வரலாற்று பதிவாக பராசக்தியை கொடுத்து இருக்கிறார்கள்.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம்







