பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய ஜனநாயகன் ; புதிதாக களமிறங்கிய 4 படங்கள்….!

பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜனநாயகன் விலகியுள்ள நிலையில் புதிதாக நான்கு தமிழ் படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், ஜனநாயகன் திரைப்படமே தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்படமானது தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு ஜனவரி 21 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த நிலையில் ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில் 4 புதிய திரைப்படங்கள் பொங்கல் தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் படி கார்த்திக் – நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ’வா வாத்தியார்’  திரைப்படமானது தயாரிப்பாளரின் நிதி தொடர்பான வழக்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதே போல நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் (டிடிடி) படம் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வா வாத்தியார், டிடிடி ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிடைந்த ’தெறி’ படமானது ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி – ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகியுள்ள திரௌபதி 2 திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.