“தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்” – நயினார் நாகேந்திரன்!

தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு 100 நாட்களாகிவிட்டன. உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் TRB தேர்வு நடத்தப்பட்டு 60 நாட்களாகிவிட்டன. ஆனால், இவ்விரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை இன்றுவரை வெளியிடாமல், இளைஞர்கள் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது திமுக அரசு.

கொடுத்த வாக்குறுதிப்படி அரசுத் துறைகளில் 5.5 காலிப்பணியிடங்களை நிரப்பும் திறன் தான் திமுக அரசிடம் இல்லையென்றால், உடனுக்குடனேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் திறன்கூட இல்லையா? அல்லது, தேர்வு முடிவுகளை வெளியிடாமலேயே, அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா?

மாதக்கணக்கில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சிக்கும் மெத்தன திமுக அரசுக்கு, மாதந்தோறும் ஒரு வெற்றுப் பெருமை விழா நடத்துவது ஒன்று தான் கேடு! கல்விக் கடனையும் ரத்து செய்யாமல் வேலைவாய்ப்பைபும் வழங்காமல் தவிக்கவிடும் அறிவாலயம் அரசுக்கு வரும் தேர்தலில் முடிவு கட்டுவர் தமிழக இளைஞர்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.