நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியா …? – சட்டமன்றத்தில் உதயநிதி கேள்வி…!

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சருக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஆளுநர் உரை நாளன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 1 முறையும், முடிவில் தேசிய கீதம் 1 முறையும் பாடப்படும். ஆனால் தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் என்பது தான் எங்கள் கேள்வி. தமிழ்த்தாய் வாழ்த்தையும் 2 முறை பாட சொல்லி ஆளுநரிடம் கேட்டிருக்கலாமே.

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்? நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி போன்ற தேர்வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த யுபிஎஸ்சி தேர்வில் 60ல் 56 பேர் இத்திட்டத்தால் பயன்பெற்றவர்கள். இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது. திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதலமைச்சர் விஜய் பதில் செல்ல வேண்டும்.

அண்ணன் Power-க்கு வந்தால் தமிழ்நாடு மாறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அண்ணன் கைக்கு Power வந்த நாளில் இருந்து, தமிழ்நாட்டுக்கே Power போய் விட்டது என்று ஆளுங்கட்சிக்காரர்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள்.

பவர் ஷேர் கொடுத்த ஆளும் கட்சியால், அவர்கள் கட்சி அலுவலகத்துக்கே பவர் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். கடந்த 2 நாளாக ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட்டாகி விட்டதாம். அங்கு வந்தவர்கள் கூட பனையூரிலேயே பவர் இல்லை என்று புலம்பினார்கள் என்று தகவல் வந்து உள்ளது.

முன்பெல்லாம் புயல், மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் தவெக ஆட்சி அமைந்த பிறகுதான், முதல்முறையாக கரெண்ட் இல்லை என்று பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்து உள்ளார்கள். சென்னையில் ஜூன் 9 ஆம் தேதி 4 தனியார் பள்ளிகள், கரெண்ட் இல்லை என்று விடுமுறை விட்டுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் எதுவும் பேசுவதில்லை. ‘தீமையின் முன் மௌனமாக இருப்பதும், ஒரு வகையில் தீமைக்குத் துணை நிற்பதற்குச் சமம்’ என்ற பழமொழி இந்த அரசுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.