“எம்.பி.க்களை விலைக்கு வாங்கப் பணமிருக்கிறது, மக்கள் நலனுக்கு நிதி இல்லையா?” – ஆதித்யா தாக்கரே

உண்மையான சிவசேனா என்பது தங்களின்  பிரிவு மட்டும் தான் என்று உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்தியா தாக்கரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

மாகராஷ்டிரா மாநிலக் கட்சியான சிவசேனா கடந்த 2022-ஆம் ஆண்டு இரண்டாக பிளந்தது. கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு குழு பாஜக கூட்டணிக்கு சென்றது.

இந்த நிலையில், சிவசேனா உத்தவ் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஏக்நாத் ஷிண்டே தரப்பு தங்களின் பக்கம் இழுக்க ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் வியூகம் வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உண்மையான சிவசேனா என்பது தங்களின்  பிரிவு மட்டும்தான் என்று உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்தியா தாக்கரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதித்யா தாக்கரே, “சிவசேனா” என்றாலே அது ஒன்றுதான், அது தங்களது சிவசேனா  பிரிவு மட்டுமே. பா.ஜ.க.வின் ஆதரவோடு செயல்படும் மற்றொரு பிரிவினர் ஷிண்டே தரப்பு எக்காரணம் கொண்டும் உண்மையான சிவசேனாவாக மாற முடியாது. தங்கள் கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு, தற்பொழுது சுயநலத்திற்காக அணி மாற நினைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வாக்களித்த மக்களின் தீர்ப்பிற்குத் துரோகம் இழைகின்றனர். அரசு ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கவோ அல்லது ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவோ இந்த அரசிடம் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க மட்டும் இவர்களிடம் எப்படிப் பணம் இருக்கிறது?”

பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாகக் கலவரங்களை உருவாக்கத் தெரியுமே தவிர, ஒழுங்காக ஆட்சி நடத்தத் தெரியாது. இதற்கு மும்பை மற்றும் புனே மாநகராட்சிகளின் தற்போதைய அவலநிலையே மிகச் சிறந்த சான்று. தற்போதைய ஆட்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குதொகுதி மேம்பாட்டு நிதிகள் கூடச் சரியாக வழங்கப்படாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.