மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே நல்லகண்ணுவின் உடல் மருந்துகளை ஏற்கும் நிலையை படிப்படியாக இழந்து நேற்று மதியம் காலமானார். இதை அடுத்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “எல்லோரும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று தன் இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புரட்சியாளர்.

பொது வாழ்க்கையில் அரசியலில் தூய்மை என வாழ்வின் இறுதி நொடி வரை கடைபிடித்த மகத்தான தலைவர். வெவ்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்கள் கூட தன் மீது சிறு விமர்சனத்தை கூட வைக்க முடியாத மனித புனிதனாக வாழ்ந்தவர். இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு அரசியல் தலைவன் வாழ்ந்தானா என்று எண்ணி எண்ணி வியக்கும் அளவிற்கு தன் வாழ்க்கையை செதுக்கி செதுக்கி செம்மைப்படுத்திக் கொண்ட மகத்தான மேதை. இந்த தலைமுறை பிள்ளைகள் நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மிகப்பெரிய போராட்டக்காரர்.

தாமிரபரணி ஆற்றில் உன்னை அள்ளி அற்றை சிதைக்கிறார்கள் என போராட்டத்தை முன்னெடுத்த போது, மணலில் தானும் அமர்ந்து போராட்டத்திற்கு வலு சேர்த்த மாபெரும் வீரர். எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான அன்பு செலுத்தி எல்லோரையும் சமமாக நடத்தும் மனித பான்பு அவரிடம் இருந்தது. நல்லகண்ணு என்பது ஒரு பெயர் அல்ல 100 ஆண்டுகால வரலாறு, வருங்கால தலைமுறைக்கு மிகச்சிறந்த வழித்தடம். எவ்வளவு வேண்டுமானாலும் அவரைப்பற்றி படித்துக் கொண்டே இருக்கலாம் அப்படிப்பட்ட பாடத்தை படிப்பினையை விட்டு சென்ற வரலாற்று நாயகன் நம் நல்லகண்ணு ஐயா அவர்கள். கடைசி நொடி வரை இந்த மக்கள் நலனு க்காக உழைத்த ஓய்வறியாத உழைப்பாளி, உன்னத போராளி, நம்மோடு இல்லை என்பதை நினைக்கும்போது மிகுந்த மன வலியை கொடுக்கிறது. நாங்கள் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த பிள்ளைகள் என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்.

மிகுந்த துயரம் வாட்டுகிறது அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் பெரிதும் நேசிக்கின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் நல்லகண்ணு அய்யாவின் பிள்ளைகள் நாங்கள் பெருமிதத்தோடு செவ்வணக்கம் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.