ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான ராஜீவ் கவுடா செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் கூறியதாவது:
”பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மத்திய அரசு தோல்வியை சந்தித்து, பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இந்தியாவில் விலைவாசி உயர்வும், வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு ரூ.410 ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.1,113 ஆக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.போன்ற நடவடிக்கையால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கவில்லை. கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் டெபாசிட் தாரர்களின் சேமிப்பை கொண்டுள்ள எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ போன்ற மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் அதானி நிறுவனங்களுக்கு முதலீடுகள் மற்றும் கடன்களை வழங்கியுள்ளது.
பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை புறக்கணிக்கிறது. 2014-ம் ஆண்டிலிருந்து தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் 23% அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021-ம் ஆண்டிலிருந்து 4.2 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு பலவீனம் அடைந்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பண பலத்தை பயன்படுத்தி கவிழ்த்தது. கொரோனா காலத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்தபோதிலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி தலைமையிலான அரசாங்கம் மறுப்பது ஏன்?
இரண்டாவது கொரோனா அலையின் போது, பாஜக அரசு அதனை எதிர்கொள்ள தயாராக இல்லாததால், அதிக மரணங்கள் நிகழ்ந்தன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி ,போதுமான ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் இல்லாததால் இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 47 லட்சமாக இருந்தது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என பாஜக அரசு தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு சிறுபான்மையினர் கூட இல்லை. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சி அமைக்கும்.” என கூறியுள்ளார்.







