“அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில்…

“The Constitution and the national anthem have been insulted again” - Governor's Mansion explains!

தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணியளவில் பேரவை மண்டபத்தில் கூடியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருந்தார். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில், தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை எனக் கூறி ஆளுநர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறினர்.

கடந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டும் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் ட்விட்டர் (எக்ஸ்) பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில்,

“தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் சபாநாயகர், முதலமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இது மிகவும் கவலைக்குரியதாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என ஆளுநர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.