’அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை இல்லை’ – சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கில், தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,…

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கில், தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், பி.எஸ்.ராமன் என்.ஜி.ஆர்.பிரசாத் உள்ளிட்டோர், பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் திருத்தம் கொண்டு வர உள்ளதாகவும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டு வர உள்ளதாகவும் வாதிட்டனர். அப்போது, ஜனநாயக மரபுகளை மீறி, விதிகளைத் திருத்த முடியாது எனத் தெரிவித்த அவர்கள், பொதுக்குழுக் கூட்டத்தை நடக்கலாம். ஆனால், ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரினர். கட்சியில் ஒரு தரப்பு கூட்டம் நடத்தவும், மற்றொரு தரப்பு கூட்டத்தைத் தள்ளிவைக்கவும் கூறியுள்ளது. கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனத் தீர்மானம் நிறைவேற்றி நிலையில் மீண்டும் திருத்தம் செய்ய உள்ளதாகவும், அதுபோல திருத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் வாதிட்டனர்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது எனவும், கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்படப் போவதில்லை எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு எனவும், பொதுக்குழுவின் நிகழ்ச்சிநிரலை இருவரும்தான் முடிவு செய்ய முடியும் எனவும் வாதிட்டார். அப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவிற்குச் செல்ல முடியாது எனப் பன்னீர்செல்வம் தரப்பில் கூறிய போது குறுக்கிட்ட நீதிபதி, பொதுக்குழுவில் திடீரென எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமென யாராவது சொன்னால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர், ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு. அதனை எழுப்புவது என்பது வேறு எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்கக் கட்சியில் விதியில்லை எனவும், கொடுத்த தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது என்றும் வாதிட்டார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய்நாராயண் மற்றும் ராஜகோபால் ஆகியோர், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் ஏதும் அறிவிக்கப்பட மாட்டாது எனவும், முந்தைய காலங்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். மேலும், கட்சி விதிகளைத் திருத்தம் செய்யப் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், நாளையே திருத்தம் நடைபெறும் என்பது வெறும் யூகம் தான் என்றும், திருத்தங்கள் கொண்டு வரப்படலாம். கொண்டு வரப்படாமலும் போகலாம் எனத் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், திருத்தம் என்பது 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் எனவும், இந்த ஜனநாயக நடைமுறையைத் தடுக்க முடியாது என்றும், விதிகளில் திருத்தம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி: ‘ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம்; முதலமைச்சர் அறிவிப்பு’

அப்போது, சுரேன் பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கட்சியில் ஒரு தரப்பு கூட்டம் நடத்தவும், மற்றொரு தரப்பு கூட்டத்தைத் தள்ளிவைக்கவும் கூறியுள்ளது. 23 தீர்மானங்களைத் தவிர வேறெதுவும் நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளை மீறமாட்டேன் எனப் பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கும் நிலையில், பொதுக்குழுவில் திருத்தம் செய்யப்படலாம், செய்யாமலும் போகலாம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறுவதிலிருந்து பூனை வெளி வந்து விட்டது என்பது தெளிவாகிறது எனவும், அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டம் நடத்த எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று தான் மனுதாரர்கள் கோருவதாக நீதிபதி சுட்டிக்காட்டியதற்கு, விதிகளில் திருத்தம் செய்யப்படுமா ? செய்யப்படாதா? என்பது பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் இடத்தில் தான் தெரிய வரும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இடைக்கால மனுக்கள் மீதான உத்தரவைத் தள்ளிவைத்தனர். அதனைத்தொடர்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உத்தரவு பிறப்பித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அனைத்து தரப்பினரும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளைத் திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், பொதுக்குழுக் கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறினார்.

மேலும், கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாகத் தலையிடுவதில்லை எனக் கருத்து தெரிவித்த அவர், நிர்வாக வசதிக்காகச் சட்ட திட்டங்களைக் கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை, வழக்கில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஜூலை 11-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.