கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு! கட்டுமான நிறுவனத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு…

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கினார்.  அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காகவும்,  ஒப்பந்ததாரர் கட்டணமாகவும் ரூ. 3.58 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.  1996ம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ரூ.1.4 கோடி செலுத்தி உள்ளார்.  இந்நிலையில்,  2003 ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி,  கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படியுங்கள் : தொடங்கியது ‘The GOAT’ திரைப்படத்தின் ‘போஸ்ட் ப்ரொடக்ஷன்’

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது.  வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,  நடிகர் கவுண்டமணி இடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,  கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து,  நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.  இந்த மனு  நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்டுமான நிறுவனம் தரப்பில் கூறியதாவது :

“3 தவணையாக முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டது.  அதன் பின்னர் ரூ. 3 கோடி வரை தரப்படவில்லை.  இந்த பாக்கி தொகையை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்தது” என தெரிவித்தனர்.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தை ஒப்படைக்க ஏன் மறுக்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகளின் கேள்விக்கு கட்டுமான நிறுவனம் தரப்பில் பதிலளித்தாவது :

“2008ம் ஆண்டு முதல்,  மாதம்  ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் வட்டி கணக்கீட்டு வழங்க வேண்டும் என்பதும் உயர்நீதிமன்ற உத்தரவாக உள்ளது.  ஒப்பந்தம் போட்டது போல முழு தொகையும் செலுத்ததாத நிலையில் எவ்வாறு அதனை வழங்க முடியும்”என தெரிவித்தனர்.

பின்னர்,  “கட்டுமான ஒப்பந்தம் எத்தனை மாதங்களுக்கு போடப்பட்டது ? மற்றும் அந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஏன் கட்டவில்லை ?” என நடிகர் கவுண்டமணி தரப்பினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நடிகர் கவுண்டமணி தரப்பில் கூறியதாவது :

“இந்த விவகாரத்தில் அந்த மொத்த நிலமும் தங்களுடையது.  அந்த நிலத்தில் கட்டுமானத்தை மேற்கொள்ள ரூ. 1. 4 கோடி வழங்கப்பட்டது.  ஆனால் கட்டுமானம் குறிப்பிட்ட கால வரம்பில் கட்டப்படவில்லை.  இதனையடுத்து வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செயப்பட்டு,  அவரின் அறிக்கையின்படியே உயர்நீதிமன் றம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது” எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  இரு தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகு,  நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.