திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக எம்பியும், அந்த தொகுதி வேட்பாளுமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 சதவிதத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இதையும் படியுங்கள் : ரவீந்திரநாத் தாகூரை அவமரியாதை செய்தாரா பிரதமர் மோடி? – உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது என்ன?
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அப்போது வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சக்திவேல் அறிவித்தார்.
இபிஎஸ் வருகையால் எழும்பூர் நீதிமன்றத்தின் அருகில் அதிமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.








