திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்

விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர்…

விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள வி.அகரம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்லபாக்கியம் (65). இவர் கடந்த 13-ந் தேதி அதே பகுதியில் உள்ள தனது மகள் பவுனம்மாள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இவ்வாறு கூறிவிட்டு சென்றவர் காணாமல் போனதையடுத்து, இதுகுறித்து மூதாட்டியின் மகன் பழனிவேல் வளவனுார் காவல் நிலையத்தில் தனது தாயார் காணவில்லை எனவும் தனக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லபாக்கியத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்லபாக்கியத்திடம் சிறுவன் 2 ஆயிரம் திருடியதை அறிந்த மூதாட்டி சிறுவனை பார்க்கும் இடத்திலெல்லாம் தன்னிடம் திருடிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு வந்ததாகவும் தெரிந்தது.

இதே போன்று கடந்த 13-ந் தேதி இரவு தன்னிடம் செல்லபாக்கியம் பணத்தை கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், செல்லபாக்கியத்தை தாக்கியதாகவும் இதனால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து, அருகிலுள்ள கதிர்வேல் என்பவரின் வீட்டிலுள்ள செப்டிக் டேங்க்கில் செல்லபாக்கியத்தின் உடலை போட்டு மறைத்து விட்டு எதுவும் தெரியாது போல் இருந்ததாகவும் சிறுவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் செப்டிக் டேங்க்கில் இருந்த செல்லபாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருடிய பணத்தை கேட்ட மூதாட்டியை சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வி. அகரம் பகுதியில் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதியை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.