இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி-20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களில் வெளியேற விராட் கோஹ்லி மற்றும் ரிஷப் பன்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தனர்.
இறுதி ஓவர்களில் வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பெரிதாக ரன் எடுக்காமல் வெளியேறினர். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் பவல் இருவரும் நிதானமாக விளையாட வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தது.
இருப்பினும், 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய இந்தியாவின் ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் 2 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றி உள்ளது.
இந்திய அணியின் வெற்றியால் 100க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற 2வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. முதல் இடத்தில் 118 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது








