“செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக உடனடியாக நிறுத்த வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!

நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை பாஜக உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மத்திய அரசு கொண்டு வந்த “தேசிய செவிலியர் பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமை” (NRTS) திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் கடந்தும், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு செவிலியர்கள் இன்னும் இதில் பதிவு செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டிலேயே அதிக செவிலியர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 4,76,264 பதிவுசெய்த செவிலியர்களில் வெறும் 57,084 பேருக்கு மட்டுமே (12% மட்டுமே !) இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4.19 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டுச் செவிலியர்களின் விவரங்கள் இன்னும் ஒன்றிய அரசின் பட்டியலில் ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய தொழிலும்சார் செவிலியர் சங்கத்தின் (IPNA) இணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளது போல், இந்திய செவிலியர் கவுன்சிலின் (INC) போதிய மேலாண்மையின்மையும், பொறுப்பின்மையுமே இத்தகைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம்.

மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரவோ அல்லது புதிய பணிக்கு மாறவோ தேவையான “தடையில்லாச் சான்றிதழ்” (NOC) பெற மாதக்கணக்கில் செவிலியர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியச் செல்ல விரும்புவோரின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடங்கியுள்ளன. செவிலியர்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா அவர்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டும். விடுபட்ட அனைத்துச் செவிலியர்களின் பதிவையும் விரைவுபடுத்தி, அடுத்த 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் “தேசிய தனித்துவ அடையாள அட்டைகளை” (NUID) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “டிஜிட்டல் இந்தியா” என மார்தட்டிக்கொள்ளும் பாஜக அரசு, நாட்டின் சுகாதாரத் தூண்களாகத் திகழும் செவிலியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.