தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு, கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள், மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் இல்லங்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்திலான கற்றல் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 புதிய இல்லங்கள்!
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் 67 இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிகையினை கருத்தில்கொண்டு அவர்களின் மறுவாழ்விற்காக தொழிற்பயிற்சியுடன் கூடிய கூடுதல் இல்லங்கள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள். ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என 2026-2027ஆம் நிதி ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 14 வயதிற்கு மேற்பட்ட அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தொழிற்பயிற்சியுடன் கூடிய ஒரு இல்லத்திற்கு 40 பயனாளிகள் தங்கி பயன்பெறும் வகையில் கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தர்மபுரி, தஞ்சாவூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக 10 இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் விஜயால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த இல்லங்களில், உள்ளுறையாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்கும், அவர்கள் சமூகத்தில் சுயசார்புடன் வாழவும் வழிவகுக்கும்.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்!
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 10 அரசு சிறப்புப்பள்ளிகளும், 17 அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்புப்பள்ளிகளில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், இந்திய சைகை மொழி (ISL) மற்றும் தமிழ் விளக்கங்களுடன் பாடப்புத்தகங்களை கற்பிக்கும் பொருட்டு, 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் (Virtual Reality Learning) முறையில் கற்பிக்கும் திட்டம் ரூ. 0.64 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மெய்நிகர் கற்றலுக்கு (VR) உதவும் Headset. தமிழ்வழிக் கல்வி பாடத்திட்ட கருத்துகளுடன் கூடிய 45 மணி நேர ஒளி மற்றும் சைகை மொழி உள்ளடக்கிய தொகுப்பு, MP4 காணொலி தொகுப்பினை மெய்நிகர் கற்றலுக்கு ஏற்ற தொகுப்பாக மாற்றுதல் போன்றவை மூலம் மெய்நிகர் கற்றல் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உபகரணங்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படும். முதற்கட்டமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப்பள்ளிகளில் பயிலும் 300 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.0.64 கோடி மதிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு, செவித்திறன் குறைபாடுடைய சிறப்புப்பள்ளிகளில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடப்புத்தகங்கள் முப்பரிமாண மாதிரிகள் (3D) மூலமாகவும், இந்திய சைகை மொழி (ISL) மற்றும் தமிழ் விளக்கங்களுடன் மெய்நிகர் கற்றல் முறையில் கற்பிப்பதன் மூலமாகவும் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் புரிதல் திறன் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 புதிய இல்லங்கள்!
மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன், மனநல பாதுகாப்புச் சட்டம். 2017ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் ஏற்கெனவே 51 இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூடுதல் பயனாளிகளின் எண்ணிகையினை கருத்தில் கொண்டு. மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்காக கூடுதல் இல்லங்கள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு. 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 10 இல்லங்கள் ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு இல்லத்திற்கு 50 மனநலம் சார் மாற்றுத்திறனாளிகள் தங்கி பயன்பெறும் வகையில் மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்காக கூடுதலாக 10 இல்லங்கள் திருவாரூர். சிவகங்கை. கன்னியாகுமரி, சேலம். கோயம்புத்தூர். காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் தலா ஒரு இல்லமும், திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு இல்லங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், மனநலம் சார் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் ஆதரவு வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. அவர்கள் மனநிலையில் முன்னேற்றம் அடையும்போது அவர்களை மீண்டும் குடும்பத்தினருடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சமுதாயத்தில் அவர்கள் மரியாதையுடன் வாழ வழிவகுக்கிறது.




