இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியுமா? உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்தவர்கள், வெளிநாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்தி அங்கு விவாகரத்து பெற்றாலும் அது இந்தியச் சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தாராளமான விவாகரத்துச் சட்டங்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியச் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத காரணங்களின் அடிப்படையில் வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கும் விவாகரத்து உத்தரவு, இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்றும், அத்தகைய உத்தரவைப் பயன்படுத்தி ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தால் அவர் மீது இருதார மணக் குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு விவாகரத்து உத்தரவு இந்தியாவில் செல்லாது!

குறிப்பாக, கணவன் – மனைவி இடையிலான திருமண உறவு முற்றிலும் முறிந்துவிட்டது (Irretrievable Breakdown of Marriage) என்ற காரணத்தைக் கூறி வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்து பெறும் நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியச் சட்டத்தின்படி, திருமண உறவு முறிந்துவிட்டது என்பது விவாகரத்து வழங்குவதற்கான சட்டப்பூர்வ காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்தக் காரணத்தின் அடிப்படையில் வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கும் விவாகரத்து உத்தரவு இந்தியாவில் செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு!

இந்தியாவில் இந்து முறைப்படி முதல் திருமணம் செய்த ஒருவர், மனைவியின் எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டு நீதிமன்றத்தில் திருமண உறவு முறிந்துவிட்டதாகக் கூறி விவாகரத்து பெற்றுள்ளார். அதன்பிறகு அவர் இரண்டாவது திருமணமும் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு இந்தியச் சட்டப்படி செல்லாது என்பதால், முதல் திருமணம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு விவாகரத்து உத்தரவு இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகாத நிலையில், அந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி முதல் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கணவர் கூற முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற முதல் திருமணம் நீடிக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்ததால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494-ன் கீழ் இருதார மணக் குற்றத்திற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றாலும் சட்டம் பொருந்தும்!

இரண்டாவது திருமணம் செய்தபோது தான் பிரிட்டன் குடியுரிமை பெற்றிருந்ததாகவும், இரண்டாவது திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றதால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கணவர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. முதல் திருமணம் இந்தியாவில் இந்து மதச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி நடைபெற்றுள்ளதால், பின்னர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றது அல்லது இரண்டாவது திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது என்பதைக் காரணம் காட்டி இருதார மணக் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இரண்டாவது திருமணம் நடைபெற்ற இடத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

கணவரின் பெற்றோர், இரண்டாவது மனைவிக்கு நிவாரணம்!

இந்த வழக்கில் கணவர் மீது தொடரப்பட்ட இருதார மணக் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேநேரத்தில், கணவரின் பெற்றோர் மற்றும் இரண்டாவது மனைவி ஆகியோர் மீது தொடரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற திருமணத்தை வெளிநாட்டில் விவாகரத்து பெற்றதாகக் கூறி இந்தியச் சட்டத்தின் கீழான பொறுப்புகளில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.