இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவம்பர் 13) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வானிலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவம்பர் 15ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்றைய மழை வாய்ப்பு (நவம்பர் 13):

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.