திமுக தலைமையில் இந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய வலியுறுத்தி பல்வேறு கட்சி தலைவர்களுக்கு கடந்த ஆண்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிக்கவும் : கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா; வெயிலில் காத்திருந்த பள்ளி மாணவர்கள்
இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும் என அக்கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டுக் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பிஆர்எஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதற்கூட்டம் இணையவழியில் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது குறித்த கருத்துகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், திமுக தலைமையில் தேசிய அளவிலான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







