தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டுகின்றன. அதேபோல், நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (20.1.26) தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர். சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு எங்கே போச்சு? ஜனநாயகம் எங்கே போச்சு? என முழக்கங்கள் எழுப்பினர். ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.







