நேபாள் : மின்சார வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

நேபாளில் மின்சார வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளில் புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான மனகாமனா கோவில் அருகே உள்ள காந்தர் என்ற மலைப்பகுதியில் நேற்று மாலை விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

மலையிலிருந்து இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த மின்சார வாகனம் சுமார் 150 முதல் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்குத்தான மலைப்பாதையில் இறங்கும்போது மின்சார வாகனத்தின் பிரேக் சரியாக செயல்படாததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாளில் இதே போன்ற ஒரு விபத்தில் 27 இந்தியப் பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.