மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் அவ்வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள் என உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள். ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.
இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.







